மிழகத்தில் கிரானைட் ஊழலை வெளிச்சத்துக்கு கொண்டுவந்த ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம், "தனக்கு வழங்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பை அரசு திரும்பப் பெற்றுக்கொண்டதால் என் உயிருக்கு ஆபத்து இருக்கிறது' என்று சமீபத்தில் அவர் எழுதிய கடிதம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. 

இந்த சூழலில், தமிழக அரசில் பணிபுரியும் பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சிலர் மன உளைச்சலில் தவிப்பதாகவும், பணிபுரியும் இடத்தில் அவர்களுக்கு பாதுகாப்பில்லை என்றும் கோட்டையில் பரபரப்பாகப் பேசப்படுகிறது. சகாயம் வெளிப்படுத்தியது போல பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் குமுறல்களும் விரைவில் வெடிக்கும் என்கின்றனர். இது குறித்து நாம் விசாரித்தபோது ஏகத்துக்கும் பகீர் தகவல்கள்.

சென்னை எழிலகத்தில் வருவாய் நிர்வாகத்தின் கூடுதல் ஆணையராக (சினிமா) இருக்கிறார் செந்தா மரை ஐ.ஏ.எஸ். வழக்கம்போல் அலுவலகம் வந்த அவர், தனது மேஜையின் ட்ராவைத் திறந்த போது, அதில்  500 ரூபாய் நோட்டுகள் இருந்ததைக் கண்டு பதறிப்போனார். பதட்டமான செந்தாமரை, அலுவலக உதவியாளர் தியாகராஜன், பி.சி. உமாமகேஸ்வரி இருவரையும் அழைத்து, என்ன இது? என்று கேட்க, இருவரும் திருதிருவென முழித்தனர். 

Advertisment

அவர்கள் பதில் சொல்லாததால், விஜிலென் ஸில் ரிப்போர்ட் பண்றேன் எனச் சொல்லிக் கொண்டே, அவர் போனை எடுத்ததும், "மேடம்... மேடம் அது என்னுடைய பணம் தான். ஊருக்குப்போகிறேன். அதனால் இங்கு வைத்தேன். சாயந்தரம் போகும்போது எடுத்துக்கொள்வேன்'' எனச்சொல்ல, விளக்கம் சரியில்லையே என நினைத்து கடும் கோபமான செந்தாமரை, கடுமையாக அவரை கண்டித்தார். "முதலில் இந்த பணத்தை அப்புறப்படுத்துங்கள்'' என உத்தரவிட, அந்த பணத்தை எடுத்துக்கொண்டார் தியாக ராஜன். அதில் மொத்தம் 23,000 ரூபாய் இருந்தது. அத்துடன், இது தன்னுடைய பணம்தான் என்பதை தியாகராஜனிடம் எழுதி வாங்கியதோடு, மேல் நடவடிக்கைக்காக துறையின் கூடுதல் கமிஷனர் (நிர்வாகம்) நடராஜனிடமும், அசிஸ்டெண்ட் கமிஷனர் ஆஷாவிடமும் புகார் தெரிவித்தார் செந்தாமரை. அவர்களிடம் பணம் ஒப்படைக்கப்பட்டது. 

இந்த விவகாரத்தை உடனடியாக மேலதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து விட்டு, தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையிடம் பணத்தை ஒப்படைத்து விசாரணைக்கு உத்தரவிட்டிருக்க வேண்டும். ஆனால், இந்த பிரச்சினையில் செந்தாமரை புகார் கொடுத்தும், நடராஜனும் ஆஷாவும் எந்த நடவடிக்கையையும் எடுக்க வில்லை. மிகச்சாதாரணமாக அவர்கள் இந்தப் பிரச்சினையிலிருந்து கடந்து சென்றுவிட்டனர். 

இதேபோல, கடந்த வருடம், கிருஷ்ணகிரி யிலிருந்து 2 பேர் செந்தாமரையின் அலுவலகத் துக்கு வந்தனர். அதில் ஒருவர் தன்னை வேடியப்பன் என அறிமுகப்படுத்திக்கொண்டு, நிலம் தொடர்பாக செந்தாமரை மேடத்தை பார்க்க வேண்டும் என உதவியாளரிடம் சொல்ல,  இண்டர்காம் வழியாக தகவல் செந்தாமரைக்கு தெரிவிக்கப்படுகிறது. 

Advertisment

அவரோ, "நிலம் தொடர்பான சப்ஜெக்ட் என்னிடம் இல்லை. நிலத்தை கவனிக்கும் அதிகாரியிடம் அவர்களை அனுப்பி வையுங்கள்' என்று சொல்லியுள்ளார். அப்போது, "நீங்கள் கொடுத்த மாதிரி ஒரு கடிதம் வைத்திருக்கிறார்கள் மேடம்' என்று உதவியாளர் சொல்ல, வேடியப்பனையும், அவ ருடன் வந்தவரையும் உள்ளே அழைத்து விசாரிக் கிறார் செந்தாமரை. 

IPS1

அந்த நபர்கள் கொடுத்த கடிதத்தை வாங்கி செந்தாமரை பார்த்தபோது, குறிப் பிட்ட சர்வே எண்ணில் உள்ள நிலம் வேடியப்ப னுக்குச் சொந்தமானது என்று செந்தாமரை ஆர் டர் போடப்பட்டதாக இருந்தது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். அந்த கடிதத்தில் அவரது பெயர், பதவி, கையெழுத்து மூன்றும் இருந்தது. இப்படி ஒரு உத்தரவை செந்தாமரையின் கையெழுத்தை போர்ஜரியாக பயன்படுத்தி தயார் செய்திருக்கிறார்கள். இதனை உணர்ந்த அவர், போலீசிடம் உடனே புகார் கொடுத்தார். வேடியப்பனை கைது செய்து கொண்டுபோனது போலீஸ். 

இதனையடுத்து, துறையின் உயரதிகாரிகள், மேலதிகாரிகள் அனைவருக்கும் இந்த போர்ஜெரி விவகாரத்தை புகாராக தெரிவித்திருக்கிறார் செந்தாமரை. இது குறித்தும் உயரதிகாரிகள் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. இப்படி இவருக்கு எதிராக பல சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இதனால் மனஉளைச்சல் களுக்கு ஆளாகி, பணிபுரியும் இடத்தில் பாதுகாப் பில்லைங்கிற சூழல் அவருக்கு ஏற்பட்டிருக்கிறது என்று விவரிக்கிறது கோட்டை வட்டாரம். 

இதுகுறித்து மேலும் நாம் விசாரித்தபோது, "தி.மு.க. ஆட்சி அமைந்ததும் 2021-ல் நில நிர்வாகத் துறையின் இணை ஆணையராக நியமிக்கப்படுகிறார் செந்தாமரை ஐ.ஏ.எஸ். துறையின் உயரதிகாரியாக ஆணையர் பதவியில் நாகராஜன் ஐ.ஏ.எஸ். இருக்கிறார். 2022-ல் நாகராஜன் நடத்திய ஒரு ஆலோசனைக் கூட்டத்தில், சினிமா லைசன்ஸ் தொடர்பாக குறிப்பிட்ட ஒருவருக்கு எதிராக தப்பான ஆர்டரைப் போடச் சொல்லி செந்தாமரையை வலியுறுத்துகிறார் நாகராஜன். 

"ஃபைலை படித்துப் பார்த்துட்டு சொல்றேன் சார்' என செந்தாமரை சொல்ல, "படிச்சுப் பார்த்துட்டு சொல்றியா? நான் படிச்சுட்டேன். என்னைவிட நீ அறிவாளியா? ரிசர்வேசன் கோட்டாவில் வந்துட்டு எனது உத்தரவுக்கு எதிரா நீ பேசுவியா? போ, போ, போய் நான் சொல்றதை செய்; இல்லைன்னா லீவு போட்டுட்டு கிளம்பிப் போ'' என ஒருமையில் கேவலப்படுத்தியிருக்கிறார் நாகராஜன். கோப்புகளை ஆராய்ந்த செந்தாமரை, நாகராஜன் சொல்ற மாதிரி ஆர்டரை போட மறுத்துவிட் டார். அப்போதிலிருந்தே செந்தாமரை யின் மீது வன்மம் அவருக்கு. 

பணிபுரியும் இடத்தில் அதிகாரி கள், அலுவலர்கள் அனைவரும் மரியாதையுடனும், மதிப்புடனும் நடத்தப்பட வேண்டும் என்று அரசாங்கத்தின் உத்தரவு இருக்கிறது. ஆனால், அப்படிப்பட்ட மரியாதை உயரதிகாரிகளால் கொடுக்கப்படுவ தில்லை. தன்னை அவமானப்படுத்தியதை, அன்றைக்கு துறையின் செயலாளராக இருந்த குமார் ஜெயந்த் ஐ.ஏ.எஸ்., துறையை கவனித்து வந்த முதல்வரின் மூன்றாவது செயலாளர் சண்முகம் ஆகியோருக்கு ரிப்போர்ட் செய்திருந்தார் செந்தாமரை. ஆனாலும் நோ ஆக்ஷன். 

இந்த சூழலில், தனது உத்தரவுக்கு அடிபணியாததால், செந்தாமரைக்கு கொடுத்துவந்த வசதிகளை முதலில் பறித்துள்ளார் நாகராஜன். அதாவது, அலுவலக பணியாளர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டது. கோப்புகள் அனுப்புவது தடுக்கப்பட்டன. ரெகுலர் டிரைவர் நியமிக்காமல் டெம்பரவரி டிரைவர் நியமித்தனர். சினிமா மற்றும் இரிக்கேசன் துறையை கவனித்து வந்த அவரிடமிருந்து இரிகேசன் பறிக்கப்பட்டது. இப்படி நிறைய விசயங்கள் நடந்தன. 

நாகராஜனுக்கு எதிராக செந்தாமரையின் புகார் மீது உயரதிகாரிகள் யாரும் எவ்வித நடவடிக்கையையும் எடுக்கவில்லை. சின்னதாக ஒரு விசாரணை கூட நடத்தவில்லை. 

இப்படிப்பட்ட நிலையில், பணியிடத்தில் பெண் அதிகாரிகளுக்கு ஏற்படும் பிரச்சனைகளை விசாரிப்பதற்காக இருக்கும்  தமிழ்நாடு சமூக நீதி (சோசியல் ஜஸ்டிஸ்) கமிட்டி, தமிழ்நாடு எஸ்.சி./எஸ்.டி. ஆணையம், தமிழ்நாடு பெண்கள் ஆணையம் ஆகிய அமைப்புகளிடம் புகார் கொடுத்தார் செந்தாமரை. கமிட்டியும் ஆணையங்களும் விசாரித்தன. ஆனால், மேலதிக ஆக்சன் எடுக்காமல் தடுக்கப்பட்டன. இதனால் செந்தாமரையின் புகார் கிடப்பில் போடப்           பட்டது. 

இந்த சூழலில், நாகராஜனின் தூண்டுதலில் துறையின் அப்போதைய செகரட்டரி குமார் ஜெயந்த் ஒரு அரசாணை பிறப்பிக்கிறார். அதாவது, நில நிர்வாகத்துறையின் இணை ஆணையராக (சினிமா) இருக்கும் செந்தாமரையை, வருவாய் நிர்வாகத் துறையின் இணை ஆணையராக (சினிமா) மாற்றி அரசாணை பிறப் பிக்கிறார் குமார்ஜெயந்த். ஆனால், வருவாய் நிர்வாகத் துறையில்  அப்படி ஒரு பதவியே இல்லை. இல்லாத பதவியில் இவர் எப்படி ஜாயிண்ட் பண்ணி பணிபுரிய முடியும்? இதனால் அவருக்கு சம்பளம் வழங்குவதும் தடைபட்டது. இதனால் மேலும் மன உளைச்சல்களுக்கு ஆளானார் செந்தாமரை. 

ஐ.ஏ.எஸ். பதவி என்பது மத்திய அரசால் வரையறுக்கப்பட்டது. இதில் நிறைய நெறிமுறைகள் இருக்கின்றன. ஆனால், மத்திய அரசிடம் ஒப்புதல் பெறாமல் ஒரு துறையில் ஐ.ஏ.எஸ். பணியிடத்தை புதிதாக உருவாக்கிட முடியாது. அந்தளவுக்கு ஐ.ஏ.எஸ். பணியிடங்கள் மத்திய அரசால் பாதுகாக்கப்பட்டவை. அப்படியிருக்கும்போது இல்லாத பணியிடத்தில் அவரை இடமாற்றினர். 

இந்த அரசாணையை எதிர்த்து நீதிமன்றத்துக் குச் சென்றுள்ளார் செந்தாமரை. வழக்கு அட்மிட் டாகி இப்போதுவரை நிலுவையில் உள்ளது. இந்த நிலையில், பல்வேறு போராட்டங்களுக்கு மத்தியில் சம்பளம் வழங்கப்படுகிறது. அதேசமயம், இதே துறையில் கூடுதல் ஆணையராக நியமிக்கப்பட்டார் செந்தாமரை. ஆனால், அவருக்கு எதிராக அவரை சிறுமைப்படுத்தும் சம்பவங்களும், ஏதேனும் ஒரு வில்லங்கத்தில் மாட்டிவிட வைக்கும் சம்பவங்களும் மட்டும் நின்றபாடில்லை. இப்படி பணிபுரியும் இடங்களில் பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு பாதுகாப்பில்லைங்கிற சூழல் நிலவி வருகிறது'' என்று ஆழமாகச் சுட்டிக்காட்டுகின்றனர் பெண் அதிகாரிகள். 

கோட்டையில் சத்தமில்லாமல் சுழன்றடிக்கும் இந்த விவகாரத்தை முளையிலேயே கிள்ளி எறிய முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு பெண் ஐ.ஏ.எஸ்.களிடம் எதிரொலிக்கிறது.